அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பை கைது செய்வதற்கான அரசு ஆணையை ஈரான் நேற்று பிறப்பித்தது. அவரைக் கைது செய்வதற்கு சர்வதேச புலனாய்வு அமைப்பான இன்டர்போலுக்கு ‘ரெட் நோட்டீஸ்’ பிறப்பிக்குமாறு அந்நாட்டு அரசுகோரிக்கை விடுத்துள்ளது.
கடந்த 2018-ஆண்டு ஈரானுடனான அணுசக்தி ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்கா விலகுவதாக அறிவித்து மேலும் அந்நாட்டின் மீது கடும் பொருளாதாரத் தடைகளையும் விதித்தது. அதையடுத்து, யுரேனியம் செறிவூட்டலை ஈரான் படிப்படியாக அதிகரித்து வந்தத சூழலில், ஜனவரி மூன்றாம் தேதி ஆளில்லா விமான தாக்குதல் மூலம் ஈரானின் முக்கிய படைப் பிரிவுத் தலைவரான காசிம் சுலைமானியைக் கொன்றது
இந்தச் சம்பவம் தொடர்பாக ஈரான் அரசு வழக்குப் பதிவு செய்தது விசாரித்தது, அதில் அதிபர் டிரம்ப் உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட அமெரிக்க அதிகாரிகள் மீது குற்றம் சாட்டப்பட்டு அவர்களைக் கைது செய்வதற்கான ஆணையையும் ஈரான் அரசு பிறப்பித்துள்ளது.
அதிபர் டிரம்ப் உள்ளிட்டோருக்கு எதிராக இந்தக் கோரிக்கையை இன்டர்போல் அமைப்பு ஏற்காது என்றே தெரிகிறது. ஈரான் அரசின் கைது ஆணை அதிபர் டிரம்ப்பை எந்தவிதத்திலும் பாதிக்காது என்றபோதிலும், இரு நாடுகளுக்குமிடையேயான மோதல் போக்கு மேலும் அதிகரித்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றனர். பல பொருளாதாரத் தடைகளாலும் தற்போது கொரோனா நோய்த்தொற்று பிரச்னையாலும் ஈரான் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிட தக்கது.